ராஜஸ்தான் நெடுஞ்சாலைவிபத்து – 11 பேர் பலி.. பலர் கவலைக்கிடம்

Spread the love

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 41 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் கேஸ் டேங்கர் வாகனத்தோடு, பல வாகனங்கள் மோதியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்தன. விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தபோது, ​​கிட்டத்தட்ட ஒரு கி.மீ தொலைவில் இருந்து தீப்பிழம்புகளை கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் பேசி, முறையான சிகிச்சையை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு காவல்துறை அதிகாரிகளிடம் பேசினார்.

“ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் பலியானோர் பற்றிய செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், எஸ்எம்எஸ் மருத்துவமனைக்குச் சென்று, உடனடியாகத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அங்குள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டேன். ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜூ ஜார்ஜ் ஜோசப் மற்றும் துறையின் மற்ற அதிகாரிகள் நெடுஞ்சாலையில் சம்பவ இடத்தில் இருந்தனர்” என முதல்வர் பஜன்லால் சர்மா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்து ஆழ்ந்த மனவேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது . இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours