புதுடெல்லி: நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவுக்கு இதுவரை 37,000 யோசனைகள் வந்துள்ளன.
மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் தேர்வு, மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய தகுதித் தேர்வுகளில் (நெட்) முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ), யுஜிசி-நெட் தேர்வுகளின் செயல்பாட்டை ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த மாதம் அமைத்தது.
தேர்வுகள் வெளிப்படையாக, சுமுகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குழுவினர், அந்த அமைப்பில் சீர்திருத்தம் செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது யோசனைகள், கருத்துகளை ஜூலை 7-ம் தேதி வரை தெரி விக்கலாம் என்று தெரிவித்தது. இதற்காக (https://innovateindia.mygov.in/examination-reforms-nta/) என்ற இணையதள முகவரியை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள், பொதுமக்களிடமிருந்து 37,000 யோசனைகள் வந்துள்ளதாக உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் இந்த உயர்மட்டக் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் வினாத்தாள் திருடியவரை கைது செய்தது சிபிஐ: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.இது தொடர்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் இதுவரை சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிஹார் மாநிலம் ஹசாரிபாக்கில் தேசிய தேர்வு முகமையின் பெட்டியில் இருந்து நீட் தேர்வு வினாத்தாளை திருடிய பங்கஜ் குமார் என்பவரை சிபிஐ நேற்று பாட்னாவில் கைது செய்தது. மேலும் அவரது கூட்டாளி ராஜு சிங் என்பவர் ஜாம்ஷெட்பூரில் கைது செய்யப்பட்டார். பங்கஜ் குமார் என்கிற ஆதித்யா கடந்த 2017-ல் ஜாம்ஷெட்பூர் என்ஐடி-யில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துள்ளார். அவரது கூட்டாளி ராஜு சிங் கசிந்த வினாத்தாளை வினியோகம் செய்துள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹசாரிபாக்கில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் நீட் வினாத்தாள் கசிந்ததாக சிபிஐ விசாரணையில் ஏற்கெனவே தெரியவந்தது.
இந்நிலையில் ஹசாரிபாக் எஸ்பிஐ வங்கியில் இருந்து இப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 செட் வினாத்தாள்கள் சீல் உடைக்கப்பட்டிருந்ததை அப்பள்ளி அலுவலர் தேசிய தேர்வு முகமையின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. இதனால் முறைகேட்டில் அவரது பங்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
+ There are no comments
Add yours