உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோவில் இன்று இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கிவிட்டது. இந்தாண்டு இந்தியாவிலேயே உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. கடந்த 2011க்கு பிறகு முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் நிலையில், ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு பொதுமக்களிடையே ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.
இதற்கிடையே இந்த உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பையின் ஐந்தாவது ஆட்டமான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டியின் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை அது மற்ற மைதானங்களைப் போல இல்லாமல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பார்கிங் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்குப் பல ஏற்பாடுகள் செய்யப்படும் போதிலும், வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் இதைத் தீர்க்கவே முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வாகவே கடந்த ஐபிஎல் சீசனில் டிக்கெட் எடுத்தோர் மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதன்படி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டி இருக்கும் நிலையில், அவர்கள் இந்த மெட்ரோ டிக்கெட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்றைய தினம் மெட்ரோ ரயில்கள் இரவு 12 மணி வரை இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், மேட்ச்சை பார்த்துவிட்டுக் கிளம்பும் சமயத்தில் மட்டுமே இந்த இலவச டிக்கெட் சலுகை பொருந்தும் என்றும் போட்டியைக் காண மைதானத்திற்கு வரும் போது இந்த சலுகை பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours