ரீமால் புயலின் தாக்கத்தின் காரணமாக நேற்று (மே 28) மிசோரம், நாகாலாந்து, அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட நான்கு வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏறக்குறைய 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில் சாலை மற்றும் ரயில் இணைப்புகள் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தவகையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள ஐஸ்வால் மாவட்டத்தில் குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 21 பேர் உட்பட மிசோரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், நாகாலாந்தில் 4 பேர்; அசாமில் 3 பேர்; மேகாலயாவில் 2 பேர் என மொத்தமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த மாநிலங்கள் அனைத்திலும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது மாநிலத்தில் ஆங்காங்கே பெரும் அளவில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, வடகிழக்கு எல்லை ரயில்வேயின் லும்டிங் பிரிவின் கீழ் உள்ள நியூ ஹஃப்லாங் – ஜடிங்கா லம்பூர் பிரிவுக்கும் டிடோக்செரா யார்டுக்கும் இடையே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐஸ்வால் மாவட்டத்தில் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் இதுவரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், நாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட வெவ்வேறு பேரிடர் சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்தது மட்டும் அல்லாது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள பெக் மாவட்டத்தில் உள்ள லருரி என்ற கிராமத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் சிறுவன் ஒருவன் மூழ்கி இறந்ததாகவும், வோகா மாவட்டத்தில் உள்ள டோயாங் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் இரண்டு பேர் மூழ்கியதாகவும் மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக, 470 வீடுகள் சேதமடைந்துள்ளது மற்றும் 750 பேர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திரிபுராவில் உள்ள அகர்தலா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சுஷாந்த் சௌத்ரி, “கடந்த 24 மணி நேரத்தில், மாநிலம் முழுவதும் சராசரியாக 215.5 மிமீ மழை பதிவாகியுள்ளது, உனகோட்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 252.4 மிமீ மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அருணாச்சல பிரதேசத்தில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours