அஸாமில் கரைபுரண்ட நதிகள்.. மாநிலம் முழுக்க 6 லட்சத்துக்கு அதிகமானோர் வெள்ளத்தால் பாதிப்பு !

Spread the love

குவஹாதி: பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தின் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தவித்துவருவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமடைந்து இருப்பதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய அரசு உதவியுடன் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காம்ரூப், கோலாகட், மஞ்ஜுலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், சச்சார், தேமாஜி, மொரிகான், உதால்குரி, திப்ருகர், தீன்சுகியா, நாகாவோன், சிவ்சகர், தரங், நல்பாரி, சோனித்பூர், தமுல்பூர், பிஸ்வநாத், ஜோர்ஹத் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் லக்கிம்பூர் மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகள் அபாய கட்டத்தை கடந்து பாய்ந்து கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தச் சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அசாம் மாநிலத்தில் மழை பொழிவு தொடரும் என தெரிவித்துள்ளது.

“எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான். எங்கள் வீடுகள்,சாலைகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இரவு முதலே ஆற்று நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பகுதியில் நிறைய வீடுகள் உள்ளன. கிராமங்கள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது இங்கு தொடர்கதையாக உள்ளது” என அசாமின் மோரிகான் பகுதியில் வசித்து வரும் நபர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும் வகையில் மக்கள் தங்களது உடமைகளுடன் வெள்ள நீரை படகில் கடந்து வருகின்றனர்.

பிரம்மபுத்திரா மற்றும் பராக் பகுதி உட்பட சுமார் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 2,70,628 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை தொடர்பு கொண்டனர். சூழலை சமாளிக்க தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சூழலை கண்காணித்து வருகின்றனர்” என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில் பதிவான கனமழை தான் தற்போது மாநிலத்தில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மே 28-ம் தேதி முதல் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours