இந்திய கடற்படையில் சேரும் ரஷ்ய போர்க்கப்பல்

Spread the love

புதுடெல்லி: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் நாளை சேர்க்கப்படுகிறது.

இந்திய கடற்படையில் தல்வார், தேக் மற்றும் கிர்விக் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கிர்விக்-3 போர்க் கப்பலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக ‘துஷில்’ போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது.

ரஷ்யாவின் ஜேஎஸ்சி ரோசோ போரோன் எக்ஸ்போர்ட் மற்றும் இந்திய கடற்படை, இந்திய அரசுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் துஷில் போர்க் கப்பல் கட்டுமானம் முடியவில்லை. இந்நிலையில், அந்த போர்க் கப்பல் கட்டுமானம் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்த கப்பல் பயன்பாட்டுக்கு வருவதால், இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்.

துஷில் என்றால் பாதுகாப்புக் கவசம் என்று பொருள். இந்த போர்க் கப்பல் 125 மீட்டர் நீளம் கொண்டது.3,900 டன் எடை உடையது. இந்தக் கப்பலில் இந்திய, ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் கொண்ட தாக்குதல் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து வானத்தில் ஏவும் ஏவு கணைகள், தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள், மற்ற அதிநவீன போர் ஆயுதங்கள் இக்கப்பலில் இடம்பெற்றுள்ளன.

கப்பல் கட்டுமானம் முடிந்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு கட்டமாக சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. இக்கப்பல் மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. அனைத்து சோதனைகளும் முடிந்ததை தொடர்ந்து இக்கப்பல்

போருக்கு தயாரான நிலையில் இந்தியாவுக்கு வருகிறது. கடல், வான் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

பயமில்லை: ‘பயமில்லை, அடக்க முடியாது, உறுதியானது’ என்ற லட்சினையுடன் இக்கப்பல் இந்திய கடற்படையை வலுப்படுத்தப் போகிறது. இக்கப்பல் எதிரி களின் ரேடாரில் கூட எளிதாக கண்டுபிடிக்க முடியாது. துஷில் போர்க்கப்பலை உருவாக்க பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பெல் நிறுவனம், கெல்ட்ரான் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours