இந்திய அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் சைமா(SIIMA) திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா முக்கியமானது. ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக பணியாற்றிய பிரபலங்கள் கௌரவிக்கப்படுவார்கள். அதே நேரம், திரையுலகினரும் இந்த விருதினை முக்கியமான அங்கிகாரமாக கருதுகின்றனர்.
துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான 11வது சைமா விருது விழா, செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய இருதினங்கள் நடைபெற்றது. முதல் நாளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 2வது நாளான நேற்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழில் சிறந்த திரைப்படமாக மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியில் செல்வன்’ தேர்வானது, அதேபோல், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பாளர் என்ற விருதையும் மணி ரத்னம் பெற்றார். ‘விக்ரம்’ படத்தில் நடித்தற்காக கமல் ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக த்ரிஷா சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர்.
சிறந்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ், சிறந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, சிறந்த அறிமுக நடிகர் பிரதீப் ரங்கநாதன், சிறந்த அறிமுக நடிகை அதிதி ஷங்கர், சிறந்த அறிமுக இயக்குனர் மாதன் ஆகியோர் விருதுகளை பெற்றனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத்தும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரவிவர்மனும் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் விருது கீர்த்தி சுரேஷூக்கும் வழங்கப்பட்டது.
+ There are no comments
Add yours