காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா ஜார்கிஹோலி மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றதைக் கொண்டாடிய போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியின் மகளும், காங்கிரஸ் இளம் தலைவருமான பிரியங்கா ஜார்கிஹோலி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அண்ணாசாகேப் ஜோலே போட்டியிட்டார். பாஜகவின் கோட்டை என்று கூறப்படும் சிக்கோடியில் காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா 6,80,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாசாகேப் 5,83,926 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 96,253 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெற்றார். முதல்முறையாக போட்டியிட்டாலும், அவரது தந்தை சதீஷ் ஜாரகிஹோலியின் அரசியல் அனுபவம் அவரின் வெற்றிக்கு துணையாக இருந்தது.
சிட்டிங் எம்.பி.யான அண்ணா சாஹேப்பின் மனைவி சசிகலா ஜொள்ளே எம்எல்ஏவாக உள்ளார். ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக சிக்கோடி மக்கள் வாக்களித்து பிரியங்காவை வெற்றி பெற வைத்துள்ளனர். 27 வயதில் நாட்டின் இளம் எம்பிகளில் ஒருவராக பிரியங்கா மாறியுள்ளார்.
இவர் எம்பிஏ பட்டம் பெற்றவர். கர்நாடகாவில் உள்ள சதீஷ் சுகர்ஸ் லிமிடெட், பெல்காம் சுகர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நேச்சர் நெஸ்ட் தோட்டக்கலை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். அவர் வெற்றி பெற்றதையடுத்து கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அத்துடன் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டவர் ஜமீர் நாயக்கவாடி(25) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஏன் முழக்கமிட்டார் என்பது குறித்து ஜமீரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours