புதுடெல்லி: ஜார்க்கண்டில் இருந்து கோவா சென்ற வாஸ்கோ-டி-காமா வாராந்திர எக்ஸ்பிரஸின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 21-ம் தேதி ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கிச் சென்ற வாஸ்கோ-டி-காமா வாராந்திர விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் பாம்பு ஒன்று உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசி 2-டயர் கோச்சின் கீழ் பெர்த்தின் திரைச்சீலைகள் அருகே பாம்பு இருப்பதை பார்த்த பயணிகள் அதை வீடியோ எடுத்தனர்.
பாதிக்கப்பட்ட ரயில் பெட்டியில் (ஏ2 31, 33) அங்கித் குமார் சின்ஹாவின் பெற்றோர் பயணித்துள்ளனர். எனவே அவர் எக்ஸ் தளத்தில் இந்த சம்பவம் பற்றி புகாரளித்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்தார். சின்ஹா மற்றும் பிற பயணிகளால் பகிரப்பட்ட வீடியோவில் திரைச்சீலைகளை சுற்றி பாம்பு நகரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது பயணிகளிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் குமார் சின்ஹாவின் எக்ஸ் பதிவில், “ரயில் -17322 (ஜசிதி முதல் வாஸ்கோ டி காமா வரை) ஏசி 2 அடுக்கு -(ஏ2 31, 33) இல் பயணிக்கும் எனது பெற்றோர் சார்பாக இந்தப் புகாரை அளிக்கிறேன். அக்டோபர் 21 ஆம் தேதி இந்த பெர்த்தில் பாம்பு கண்டெடுக்கப்பட்டது. எனவே தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். நான் குறிப்புக்காக வீடியோக்களை இணைத்துள்ளேன்” என்று தெரிவித்தார். அவரின் இரண்டாவது ட்வீட்டில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்து, “நிலைமையின் தீவிரத்தைப் பார்க்கும்போது, உங்கள் உடனடி கவனம் தேவை” என்று கூறினார்.
இதனையடுத்து ஐஆர்சிடிசி ஊழியர்களின் உதவியுடன் பாம்பு பிடிக்கப்பட்டு ரயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஐஆர்சிடிசி ஊழியர்களும் பயணிகளும் பெட்ஷீட்டைப் பயன்படுத்தி பாம்பை பிடிப்பதில் ஒன்றாக வேலை செய்யும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், ரயில்வே சேவா குழு அங்கித் குமார் சின்ஹாவின் ட்வீட்டிற்கு பதிலளித்தது. அதில், “உங்கள் PNR/UTS எண் மற்றும் மொபைல் எண்ணைப் பகிரவும். உடனடியாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உதவும். உங்கள் கவலையை நீங்கள் நேரடியாக http://railmadad.indianrailways.gov.in இல் தெரிவிக்கலாம் அல்லது விரைவான தீர்வுக்காக 139 ஐ டயல் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டது. ராஞ்சியின் கோட்ட ரயில்வே மேலாளரும், “உங்கள் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் உரிய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours