பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பீகார் மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பீகார் முதல்வரும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாகூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள், ‘பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கை இப்போது உருவானதல்ல. பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும், பீகார் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல.
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்தும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. நாட்டில் முக்கியமான போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்தல், தேர்வு தகுந்த முறையில்செயல்படுத்தப்படுகிறது என்பதில் பெற்றோர், மாணவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துதல் கட்டாயமாகும்’ இவ்வாறு அவர் கூறினார்.
பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் மத்தியில் பாஜக ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர்கள் மிகமுக்கிய பங்கு வகித்தனர். 2025ம் ஆண்டும் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்காக சிறப்பு அந்தஸ்து கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
+ There are no comments
Add yours