முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்த நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் குட்டு.

Spread the love

புதுடெல்லி: நீதிமன்ற விசாரணையின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பெங்களூருவின் ஒரு பகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அழைக்க முடியாது என்றும் தெரிவித்தது.

நிலத்தின் உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதனைத் தொடர்ந்து செப்.20 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை கேட்டிருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு உயர் நீதிமன்ற நீதிபதியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைத்தது.

இது தொடர்பாக நீதிமன்ற அமர்வு, “உயர் நீதிமன்ற நீதிபதி எங்கள் முன்பு வாதியாக இல்லாததால், நாங்கள் மேலும் வழக்கை நடத்த விரும்பவில்லை. வழக்கு விசாரணையை நாங்கள் முடிக்க விரும்புகிறோம். இந்த மின்னணு யுகத்தில் அனைத்து நிறுவனங்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் அவைகளின் பண்புகளை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். நீதிபதிகளும் தங்களின் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.

யாரும் இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் பாகிஸ்தான் என அழைக்க முடியாது. அடிப்படையில் இது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இதுபோன்ற சர்ச்சைகள் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தூண்டிவிடக் கூடாது. எந்த இடத்தில் இருந்தும் நீதியை மக்கள் அணுகுவதற்கு இந்த வசதிகள் ஒரு வடிகாலாக மாறியுள்ளன.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அதில் நேரடியாக பங்கு பெறாத நீதிமன்றத்துக்கு வெளியே இருக்கும் மக்களைச் சென்றடைகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களின் வாழ்க்கையின் முன்னனுபவங்களின் அடிப்படியில் ஒரு முன்தீர்மானம் இருக்கும் என்பதை நீதிபதிகள் அறிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் தங்களின் முன்தீர்மானங்கள் பற்றி அறிந்துவைத்திருக்க வேண்டும். ஒரு நீதிபதியின் மனமும் ஆன்மாவும் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் அப்போதுதான் நம்மால் சரியான நீதியை வழங்க முடியும்.

கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்புக் கோரியுள்ளார். நீதிமன்ற விசாரணையில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி வெளிப்படையாக மன்னிப்பு கோரியிருப்பதை மனதில் கொண்டு நீதியின் நலன் மற்றும் நீதிமன்றத்தின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு நாங்கள் வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை. நீதித்துறையின் கண்ணியம் கருதி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பவுதை நாங்கள் முற்றிலுமாக தவிர்த்து விட்டோம்” என்று தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours