கர்நாடகாவிற்கு தமிழக பேருந்து, லாரிகள் செல்லாது…!

Spread the love

இன்று காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்து விட்டதால் காவிரி டெல்டா குறுவை சாகுபடிகளைக் காப்பாற்ற முடியும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை. இதனை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறந்துவிடலாம் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவான வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கர்நாடகா 5,000 கன அடி நீரையும் திறக்காமல் பெயரளவுக்கு சொற்பமான நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது.

இதற்கு கன்னட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவின் மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் முழு அடைப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என கன்னட விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

பெங்களூருவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் போது ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பின் போது நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டங்களில் பாஜகவினர் பெருந்திரளாக பங்கேற்பர் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் விடுத்துள்ள வேண்டுகோளில், ‘’கர்நாடகாவிற்கு இன்று லாரிகளை இயக்க வேண்டாம். வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பும் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours