பாஜக கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைவர்கள் டெல்லி பயணம் !

Spread the love

சென்னை: டெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாளை (ஜூன் 7) நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக கூட்டணி கட்சி தலைவர் டெல்லி செல்கின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவதாக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நாளை (ஜூன் 7) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை குழு தலைவராக மோடியை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அதேநேரத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோரும் வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் நாளை (ஜூன் 7) டெல்லி புறப்படுகிறார். மேலும், தேவநாதன் யாதவ், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours