புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தனது சக்கரவியூக பேச்சினைத் தொடர்ந்து தனக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனைக்குத் திட்டமிடப்படுவதாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தோராயமாக 2ல் ஒருவருக்கு என்னுடைய சக்ரவியூக பேச்சு பிடிக்கவில்லை. எனக்கு எதிராக சோதனைக்கு திட்டமிட்டப்படுவதாக அமலாக்கத்துறையின் உள்ளே இருப்பவர்கள் என்னிடம் தெரிவித்தனர். விரித்த கரங்களுடன் காத்திருக்கிறேன். என்னிடம் டீயும் பிஸ்கெட்டும் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் எம்.பி., சக்கரவியூகம் என்ற தொன்மக் கதை குறித்து பேசினார். அப்போது, ஆறுபேர் கொண்ட குழு ஒன்று ஒட்டு மொத்த நாட்டையும் ஒரு சக்கர வியூகத்தில் சிக்க வைத்திருக்கிறது. இதனால் ஒருவகை அச்ச சூழல் நிலவுகிறது என்றார். மேலும் இண்டியா கூட்டணி அதனை முறியடிக்கும் என்றும் உறுதியளித்தார்.
2024 – 25ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்யும் என்று தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திர போரில், ஆறு பேர் சக்கர வீயூகம் அமைத்து அபிமன்யூ என்ற இளைஞரைக் கொன்றனர். நான் கொஞ்சம் ஆராய்ந்து அறிந்து கொண்டதில் சக்கர வீயூகம் தாமரை வடிவத்தில் இருப்பதால் அது பத்ம வீயூகம் என்றும் அறிப்படுக்கிறது.
21ம் நூற்றாண்டிலும் ஒரு புதிய சக்கரவீயூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை உருவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அபிமன்யூவை எது வீழ்த்தியதோ அதுவே இன்று இந்தியாவையும் வீழ்த்துகிறது. அன்று அபிமன்யூ ஆறு பேரால் கொல்லப்பட்டார். இன்றைய சக்கரவியூகத்தின் மத்தியிலும் ஆறு பேர் உள்ளனர்” என்று பேசினார்.
சக்கரவியூகம் என்பது போரின் போது சுற்றிவளைத்து வெற்றி கொள்ள வகுக்கப்படும் பல அடுக்குகள் கொண்ட ஒரு போர் தந்திரமாகும். இந்தியாவின் இதிகாசமான மகாபாரதத்தில் அபிமன்யூ சக்ரவியூகத்தால்தான் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours