ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, திங்கள்கிழமை பகலில் ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களின் கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லோஹாய் மல்ஹர் பகுதியில் உள்ள பத்னோடா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதியில், ராணுவ வீரர்களுக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி தாக்குதல் கொடுத்ததாகவும், கூடுதல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஞாயிறு காலை முதல் ஜம்முவில் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். ரஜோரி மாவட்டம் மஞ்ச்கோட் பகுதியில் உள்ள ராணு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்தத் தாக்குதலின்போது, முகாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அந்தப்பகுதியில், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தேடி ராணுவம் மற்றும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முடர்கம், சானிகம் ஆகிய கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் இணைந்து கடந்த 6-ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, முடர்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் பிரதீப் உயிரிழந்தார்.
சானிகம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ராஜ் குமார் உயிரிழந்தார். “சில தீவிரவாதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி சென்றிருப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று காஷ்மீர் காவல் துறை தலைவர் வி.கே.பர்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours