பீகாரில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆறு செல்கிறது. இதன் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
விரைவில் இந்த மேம்பாலம் திறக்கப்பட இருந்த நிலையில், இன்று மதியம் திடீரென அந்த மேம்பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஒப்பந்ததாரர் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொண்டதே இந்த விபத்திற்கு காரணம் என அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மேம்பாலத்திற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்த போதும், ஒப்பந்ததாரர் அவற்றை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விபத்தில் மேம்பாலத்தின் 3 தூண்கள் முற்றிலுமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால், மேம்பாலத்தை மீண்டும் கட்ட வேண்டிய சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours