புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
நிபந்தனைகள் விதிக்கும் கூட்டணி கட்சிகள்…: இதற்கிடையே, பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனைகள் விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தவிர, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு காரணம், தற்போது மக்களவையில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை இல்லை. கூட்டணி ஆட்சியே நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த இரு தேர்தல்களில் பெரும்பான்மை பெற்ற பாஜக, இரு முறையும் சபாநாயகர் பதவியை தங்கள் வசமே வைத்துக்கொண்டது.
இந்த நிலையில்தான் தற்போது இரு கட்சிகளும் சபாநாயகர் பதவியை கோரி நிபந்தனை வைத்துள்ளனர். இதுதவிர சில முக்கிய அமைச்சரவை இலாகாகளையும் கேட்டு நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours