புதிய குற்றவியல் சட்டத்தின்படி இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் குற்றம் இழைத்தவர்கள், இடையூறு செய்பவர்கள், சட்டத்திற்கு புறம்பானவர்கள் மீது ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யலாம்.
அதன்படி 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் வழக்கு தொடரமுடியும். இதில் பதிவாகும் வழக்குகள் அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் சென்று தீர்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளது. இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்த வகையில் இன்று சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி , சாலையோர வியாபாரி மீது டெல்லியில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரத்தில் கடை அமைத்திருப்பதாக புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உட்பட ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த சட்டங்கள் கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசின் அரசிதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று ஜூலை 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அறிமுகம் செய்துள்ளது.
புதிய வழிமுறைகளுக்கு தடையின்றி மாறுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் என்சிஆர்பி வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் உட்பட 5,84,174 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு, 3 புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் புதிய சட்டங்களின்கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் 3 புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறி எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோர் இந்த சட்டங்களை அவசரகதியில் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் இது குறித்த வழக்கு நிலுகையில் உள்ளது. பல மாநிலங்களில் இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours