மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த கொல்கத்தா காவல் துறையினரை உடனடியாக வெளியேறுமாறு ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும், ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அம்மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படும் சிலர் நேற்று ஆளுநர் ஆனந்தபோஸை சந்திக்க வந்தனர்.
அப்போது அவர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைவதை காவல்துறையினர் சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸை சந்திக்க எழுத்துப்பூர்வ அனுமதி இருந்த போதிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜ் பவனில் (ஆளுநர் மாளிகை) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோரை உடனடியாக அந்த இடத்தை காலிசெய்துவிட்டு செல்லுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்பவனின் வடக்கு கேட் அருகே உள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டை ‘ஜன் மஞ்ச்’ (பொது மேடை) ஆக மாற்ற ஆளுநர் ஆனந்த போஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours