மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சயந்திகா பானர்ஜி, ரேயாட் சர்க்கார் ஆகியோர் பதவியேற்பு விழாவுக்கு சட்டப் பேரவைக்கு ஆளுநர் வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், பாரநகர் சட்டப் பேரவை தொகுதியிலிருந்து சயந்திகா பானர்ஜியும், பகவங்கோலா தொகுதியிலிருந்து ரேயாட் சர்க்காரும் மக்களவைத் தேர்தலுடன் இணைத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ-க்களாக தேர்வாகினர். இவர்கள் இருவரும் ராஜ்பவனுக்கு வந்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் அழைப்பு விடுத்தார்.
ஆனால், அவர்கள் இருவரும் ஆளுநரின் அழைப்பை புறக்கணித்து, மாநில சட்டப் பேரவை வளாகத்தில் அமர்ந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் சட்டப் பேரவைக்கு வருமாறு இருவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பதவிப் பிரமாணத்துக்காக மாண்புமிகு ஆளுநர் வருகைக்காக காத்திருக்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டை, தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை கைகளில் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ரேயாட் சர்க்கார் கூறுகையில், “நாங்கள் எம்எல்ஏ-க்களாக பதவியேற்க விரும்புகிறோம். எங்கள் தேர்தல் சான்றிதழ்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் காத்திருக்கிறோம். நாங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியுமா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
அரசியலமைப்பு விதிகளின்படி பதவியேற்பு விழா தொடர்பாக இறுதி கருத்தை தெரிவிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது என்றும், ஆளுநரின் அனுமதியின்றி அவை நடவடிக்கைகளில் எந்த சட்டப் பேரவை உறுப்பினரும் பங்கேற்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும் ராஜ்பவன் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க சட்டப் பேரவை சபாநாயகர், தேவைப்பட்டால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வதாக ஏற்கெனவே கூறியிருந்தார்.
+ There are no comments
Add yours