யானை தந்த வழக்கில் மோகன்லால் மீதான அனைத்து நடவடிக்கைக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
கடந்த 2011-ம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 4 யானை தந்தங்கள் சிக்கியது. இது தொடர்பாக 2012 இல் வழக்கு பதிவு செய்யபட்டது. மோகன்லால் யானை தந்தங்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பாக, இந்த வழக்கு பெரும்பாவூர் ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (ஜேஎப்எம்சி) நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மோகன்லால் மனு தாக்கல் செய்ததையடுத்து, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அப்போது, நான்கு யானை தந்தங்களை நடிகர் வைத்திருப்பது முற்றிலும் சட்டபூர்வமானது என்று மோகன்லாலின் வழக்கறிஞர் வாதிட்டார். நான்கு யானை தந்தங்களுக்கான உரிமைச் சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எனவே, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அல்லது கேரள வனவிலங்கு (பாதுகாப்பு) விதிகளின் கீழ் உள்ள விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று மோகன்லாலின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார். பின்னர் விசாரணையில், இந்த சம்பவம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது என கண்டறியப்பட்டதையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு (2019)ல் போலீசார் இந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மட்டுமின்றி, மேலும் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்குமாறு வருமானதுறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு வனத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை எதிர்த்து மோகன்லால் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அந்த பிரமாணப் பத்திரத்தில், இந்த சம்பவம் தனது பொது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆனால், இந்த பிரச்சினையை பொதுநலனாக கருதி ஐகோர்ட், வழக்கை தொடர மாஜிஸ்திரேட்டு கோட்டுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், நடிகர் மற்றும் பிறரை நவம்பர் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நடிகர் மோகன்லால், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குஞ்சு கிருஷ்ணன், மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், மோகன்லால் மீதான விசாரணைக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வரும் நிலையில், தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
+ There are no comments
Add yours