என் மீதான அவதூறு கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மக்களவைத் தலைவரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. இதில் அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு ஏற்க மறுப்பதால் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த 5-ம் தேதி மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசும்போது, “சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்பான ஓசிசிஆர்பி மற்றும் அரசியல் ஆர்வலரும் தொழிலதிபருமான ஜார்ஜ் சோரஸ் ஆகியோருடன் காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பு இருக்கிறது. இதை வைத்து நாடாளுமன்றத்தையும் மோடி அரசையும் தடம்புரள ராகுல் முயற்சிக்கிறார்” என்றார்.
நிஷி காந்த் துபேவின் இந்தக் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
மக்களவையில் நேற்றும் இதே பிரச்சினை காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களவைத் தலைவரை சந்தித்துப் பேசினேன். அப்போது, என் மீதான அவதூறு கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். என் மீதான குற்றச்சாட்டு குறித்து நான் கவலைப்படவில்லை. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும். அதில் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து 13-ம் தேதி விவாதம் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்” என்றார்.
முன்னதாக, மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட, ராகுல் மீதான அவதூறு கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஓம் பிர்லாவின் முடிவை தெரிவித்த பிறகுதான் அவை நடவடிக்கையில் பங்கு பெறுவோம்” என கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours