கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மரா – வல்லங்கி ஆகிய இரு கிராமத்திற்கு இடையே நெல் அறுவடை முடிந்து, நடக்கும் போட்டித் திருவிழா மாசி மாதத்தில் நடக்கிறது. இத்திருவிழா ஆண்டு தோறும், மீனத்தின் 20 ஆம் தேதியன்று மூல தெய்வமான நெல்லிங்குளங்கர பகவதி அம்மன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்டு ஊர்களுக்கு இடையேயான நட்பு போட்டியாக தொடங்குகிறது. இரு ஊர்கள் சார்பாக, ஊர்வலங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இருக்கின்றன. மீனம் 1 ஆம் தேதி தொடங்கும் இத்திருவிழாவில், “இரு ஊர்களும்” ஒரே மாதிரியான கும்மாட்டி, கரிவேலை போன்ற பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஊர் சார்பாகவும் , விழாவினை வியக்க வைக்கும் மூங்கில் மற்றும் மரத்தைப் பயன்படுத்தி ‘அன்ன பந்தல்’ அமைக்கப்படுகிறது.
இந்த பந்தல், பல்வேறு வண்ணங்களின் சிறிய பல்புகளால் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் அழகு பார்ப்பவரின் இதயத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அமைக்கப்படுகின்றன. இரு ஊர் சார்பாக யானைகளை அலங்கரித்து, அணிவகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
யானைகள் கோவிலை நோக்கி செல்லும்போது ‘பஞ்ச வத்தியம்’ பாண்டி மேளத்தை’ இசைக்கலைஞர்கள் போட்டி போட்டு நிலம் அதிர அடிப்பது பிரமிக்க வைக்கிறது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெடித்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வெடித்திருவிழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
வெடித் திருவிழாவில் வாண வேடிக்கைகள் பார்ப்பவர் கண்களை பிரமிக்க வைக்கும் வகையில், பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்துச் சிதறியது. இதில், நென்மரா – வல்லங்கி பகுதிகள் இரவு வெளிச்சமாக காட்சி அளித்தது. வாணவேடிக்கைகளை மிகவும் ஆடம்பரமாகவும் தனித்துவமாகவும் புதிய வழிகளைக் கண்டறிய முயற்சி செய்து போட்டியில் கலந்துகொண்டனர்.
இரு ஊர்களின் ஆரோக்கியமான போட்டிதான் இந்த வேடிக்கையான மற்றும் உற்சாகமான நிகழ்வின் உணர்வை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours