அர்விந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு முழு அமைப்பும் செயல்படுகிறது. இது சட்டவிரோதமானது. இதுதான் சர்வாதிகாரம். இதுவே அவசரநிலை என அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சுனிதா கேஜ்ரிவால், ‘அர்விந்த் கேஜரிவால் ஜூன் 20-ல் ஜாமீன் பெற்றார். உடனடியாக அமலாக்கத் துறை தலையீட்டால் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் சிபிஐ அவரை குறிவைத்தது. இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு முழு அமைப்பும் செயல்படுகிறது. இது சட்டவிரோதமானது. இதுதான் சர்வாதிகாரம். இதுவே அவசரநிலை’ என அவர் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனையடுத்து கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், திகார் சிறையில் உள்ள கேஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கலால் கொள்கை வழக்கு தொடர்பாக திகார் சிறையில் உள்ள கேஜ்ரிவாலை நேற்றிரவு வரை சிபிஐ விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தது. தற்போதைய சிபிஐ கைது மூலமாக, கேஜ்ரிவாலை சிறையிலேயே முடக்க மோடி அரசாங்கம் மோசமான தந்திரங்களை முன்வைப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
+ There are no comments
Add yours