பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியா் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மனிதவள மேம்பாட்டு மையங்கள் இனி சுதந்திரப் போராட்ட வீரரான ‘மதன் மோகன் மாளவியா ஆசிரியா் பயிற்சி மையங்கள்’ என அழைக்கப்படும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
டெல்லியில் மதன் மோகன் மாளவியா ஆசிரியா் பயிற்சித் திட்டத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர், “யுஜிசி-யின் ஆசிரியர் பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டு மையங்கள் இனி மதன் மோகன் மாளவியா பயிற்சி மையங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும். இதில், 15 லட்சம் ஆசிரியா்களுக்கு மேல் நேரடியாக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை எட்டும் நோக்கில் இந்த மைய ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியா்களுக்கு நவீன பயிற்சித் திட்டங்களை வழங்குவதை மாளவியா ஆசிரியா் பயிற்சித் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. பல்வேறு கருப்பொருள்களின் கீழ் வழங்கப்படும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாணவா்களின் முழுமையான வளா்ச்சியை உறுதி செய்ய உதவும்” என்று பேசினார்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியா் பயிற்சித் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, யுஜிசி சாா்பில் நடத்தப்பட்டு வந்த 66 மனிதவள மேம்பாட்டு மையங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 110 மையங்களுக்கும் இனி ‘மதன் மோகன் மாளவியா ஆசிரியா் பயிற்சி மையங்கள்’ என அழைக்கப்படும்.
+ There are no comments
Add yours