தமிழகத்தில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றுக்கு இடையே, விவிபாட் இயந்திரத்தை வைக்க கூடாது என்று திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் நேற்று காலை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலகட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்தித்தனர். பிற்பகலில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தனர். பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 10 அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கி, அவர்களது கருத்துகளை கேட்டறிந்தனர்.
மக்களவை தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
ஆர்.எஸ்.பாரதி (திமுக):
கடந்த தேர்தல்போல இல்லாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் இடையே விவிபாட் இயந்திரம் வைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபாட் இயந்திரத்தை வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த நடைமுறையால் 2 சதவீதம் வரை தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆணையர்களே ஒப்புக் கொள்கின்றனர். எனவே,இதை மாற்றியமைக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அதிமுக):
வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகளை முழுமையாக களைய வேண்டும்.ஒரே குடும்பத்தினர் பல வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் நிலை உள்ளதை மாற்ற வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் துணை ராணுவப் படை, சிசிடிவி கேமரா பயன்படுத்தி சுதந்திரமாக தேர்தல் நடத்த வேண்டும். உள்ளூர்காவல் துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதால், துணை ராணுவத்தினரை அதிகம் நியமிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்பு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் முதல் கீழ்நிலை வரை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜக):
மாநில தலைவர் அண்ணாமலை சார்பில், கடிதம் அளித்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் முக்கியமானதாக இருப்பதால், கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். போதிய அளவில் துணை ராணுவப்படையினரை நியமிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும்காவல் துறை உயர் அதிகாரிகளுக்குதக்க அறிவுரை வழங்க வேண்டும்.
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன்: வாக்களிப்போருக்கு 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டுவழங்க வேண்டும். ஆணையம் வழங்கும்வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க சென்றால், பட்டியலில் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாகமக்களுக்கு சந்தேகம் இருப்பதால்,முதலில் மின்னணு இயந்திரம், அடுத்து கட்டுப்பாட்டு இயந்திரம், தொடர்ந்து விவிபாட் இயந்திரத்தை வைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைசெயலாளர் மு.வீரபாண்டியன்: பதற்றமான சூழல் உள்ள இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில்பிரச்சாரம் செய்வது, சாதி, மத, இனஉணர்வுகளை தூண்டுவது ஆகியவற்றை தடுக்க வேண்டும்.
தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி:
வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று காலை தமிழகம், கர்நாடகா, கேரளாவின் தலைமை தேர்தல்அதிகாரிகள், காவல் அதிகாரிகளிடம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிகின்றனர். தொடர்ந்து, தமிழகதலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
+ There are no comments
Add yours