உத்தராகண்ட் கலவரம்… 5 பேர் உயிரிழப்பு !

Spread the love

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் 20 நாட்களாக இப்பணி நடைபெறுகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வன்புல்புரா பகுதியில் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

இங்கு மல்லீக் தோட்டம் எனும் பகுதியில் அரசுக்கு சொந்தமான நசூல் நிலத்தில் கட்டப்பட்டிருந்த மதரஸா, மசூதியை மாலை 5 மணிக்கு அதிகாரிகள் இடிக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மீது அப்பகுதியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். வீடுகளின் மேலிருந்து பாட்டில்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்களும் போலீஸாரும் காயம் அடைந்தனர். வன்முறை கும்பல்கள் வாகனங்களுக்கு தீ வைத்தன. இக்கலவரத்தில் போலீஸார் – வன்முறையாளர்கள் இடையே துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. பின்னர் ஹல்துவானி முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று காலை வரை தொடர்ந்த கலவரம் நண்பகலில் கட்டுக்குள் வந்தது. இக்கலவரத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். போலீஸார் உட்பட சுமார் 300 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹல்துவானியில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் காலவரையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஹல்துவானி ஆட்சியர் ரஞ்சனாசிங் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையாக அனைவருக்கும் கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றங்கள் சென்ற சிலருக்கு தடை உத்தரவும் கிடைத்தது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றுகிறோம். மதரஸா விவகாரத்தில் திட்டமிட்டுகூடிய கும்பல், கலவரத்துக்கு காரணமாகி விட்டது. இவர்களில் அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கலவரம் மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு பிரிந்த உத்தராகண்டில் இதுபோன்ற பெரிய கலவரங்கள் ஏற்பட்டதில்லை. கடைசியாக 2006-ல் ஹல்துவானியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 4,300 வீடுகளை அகற்ற முயன்றபோது கலவரம் வெடித்தது நினைவுகூரத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours