மணிப்பூர் மாநிலத்தில் எப்போதுதான் வன்முறை ஓய்வு இயல்புநிலை திரும்பும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் எழுந்துள்ளதையடுத்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மேதி சமூகம், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி) அந்தஸ்து கோரி வருகின்றனர். இதை எதிர்த்து மணிப்பூரின் மலை மாவட்டங்களில் ‘பழங்குடி ஒற்றுமை பேரணி’ நடைபெற்றது. கடந்த ஆண்டு மே 3 முதல் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில், தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்க புள்ளி விவரப் படி, சுமார் 60 ஆயிரம் பேர் அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். அப்போது முதல் மணிப்பூரில் போராட்டம் ஓயவில்லை.
மணிப்பூர் மாநிலம், தௌபால் மாவட்டம் லிலோங் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய குற்றவாளிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான மோதலில் திங்கள்கிழமை பொதுமக்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தௌபால், இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. இன்னும் உயிரிழந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்படாத நிலை நிலவுகிறது.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் செவ்வாய்க்கிழமை அங்கு மேலும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. மோரே நகரில் போராட்டக்காரர்கள் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் 4 போலீஸ் கமாண்டோக்கள் மற்றும் 3 எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “மணிப்பூர் மாநிலத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் கடந்த எட்டு மாதங்களாக வன்முறை, கொலை மற்றும் அழிவை பார்த்து வருகின்றனர்.
மணிப்பூரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் தில்லிக்கு வந்து பிரதமரை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரினர். ஆனால் இன்று வரையிலும் பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு முன்வரவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவும் இல்லை, மணிப்பூரைப் பற்றி பேசவும் இல்லை, இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட தலைமையா மணிப்பூருக்கு தேவை?
அரசு இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நம்பிக்கையளித்து அமைதியைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours