மகுடம் சூடப்போவது யார் ? இன்று வெளியாகிறது தேர்தல் முடிவுகள் !

Spread the love

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னிலை நிலவரம் காலை 9 மணி முதல் வெளியாகும். யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாலைக்குள் தெரிந்துவிடும்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

தேர்தலுக்கு பிறகு கடந்த 1-ம் தேதி இரவு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், பாஜக கூட்டணி 350 – 415 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கு 100 – 200 தொகுதிகள் வரைகிடைக்கலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்படும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 9 மணி அளவில் வெளியாகும். அப்போது முன்னிலை நிலவரம் தெரியும். படிப்படியாக முடிவுகள் வெளியாகி, யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாலைக்குள் தெரிந்துவிடும். முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியிடப்படும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பாதுகாப்பு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) கொண்டு செல்லப்பட்டு, அங்கு 45 நாட்கள் பாதுகாக்கப்படும். 6 மாதங்களுக்கு பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, அவை மீண்டும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைமுறை குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்படும். ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது. அந்தமாநிலங்களில் மக்களவை தேர்தலுக்காக 7 மேஜைகளும், சட்டப்பேரவை தேர்தலுக்காக 7 மேஜைகளும் ஒதுக்கப்படும்.

அருணாச்சல பிரதேசம், சிக்கிமில்சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 மாநிலங்களிலும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும்அலுவலர்கள் அதிகாலை 5 மணிக்கேவாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கான அறைகளை அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரி ஒதுக்கீடு செய்வார். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். ஒவ்வொருமேஜையிலும் வாக்குகள் எண்ணப்படுவது வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப்படும்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (https://results.eci.gov.in) அதிகாரப்பூர்வமான முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

64.20 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 97 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அதில், 64.20 கோடி பேர் வாக்களித்தது புதிய உலக சாதனை. ஜி7 நாடுகளின் வாக்காளர்களைவிட 1.5 மடங்கு அதிக வாக்காளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் வாக்காளர்களைவிட 2.5 மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 31 கோடி பெண்கள் வாக்களித்திருப்பதும் ஓர் உலக சாதனை. 7 கட்ட தேர்தல் மிகவும் அமைதியாக நடந்திருப்பது தேர்தல் ஆணையத்தின் 2 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பலன்.

ஜம்மு – காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours