இதுபோன்ற பேட்டிங்கை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் அணியால் நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது. பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் என்ன செய்கிறது என்பது எனக்கு புரியவில்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த தொடரில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ஒரே அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் தோல்வி அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று பந்துவீச்சில் பலமான அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியானது பேட்டிங்கை பொறுத்த வரை சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெரிய இலக்கினை துரத்திய பாகிஸ்தான் அணி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 128 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமான தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் பேசப்படும் விஷயமாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி அடைந்த இந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் அந்த அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை என இரண்டு பெரிய தொடர்களையும் பாகிஸ்தான் அணி கைப்பற்ற வேண்டுமெனில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இதுபோன்ற பேட்டிங்கை வைத்துக்கொண்டு உங்களால் நெதர்லாந்து அணியை கூட வீழ்த்த முடியாது. பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் என்ன செய்கிறது என்பது எனக்கு புரியவில்லை. ஏனெனில் டாஸ் வென்று முதலில் பந்துவீச சொன்னால் மட்டும் போதாது. பேட்ஸ்மேன்களும் அணிக்கு தேவையான பங்களிப்பினை வழங்க வேண்டும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட 190 ரன்கள் என்கிற இலக்கினை பேட்ஸ்மேன்கள் 40 ஓவர்கள் வரை சென்று தான் சேசிங் செய்து இருந்தார்கள்.
இப்படி பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியா போன்ற பெரிய அணிகளை வீழ்த்த முடியாது. அதேபோன்று இந்தியா போன்ற அணியோடு விளையாடும் போது எந்த ஒரு திட்டமும் இல்லாமல் விளையாடியதாகவே நான் கருதுகிறேன். ஏதோ வந்தோம் ஆடினோம் சென்றோம் என்பது போல வீரர்கள் விளையாடுகின்றனர். இப்படி விளையாடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
+ There are no comments
Add yours