‘அனைவரையும் போல்டு ஆக்கி விட்டீர்கள்’- அஸ்வினுக்கு மோடி கடிதம்

Spread the love

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்த அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு அவரை வாழ்த்தி இருக்கிறார். அஸ்வின் ஓய்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து கடிதம் –

நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த கடிதம் உங்களை வந்து அடையும் என நம்புகிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னும் பல ஆஃப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை வீசினீர்கள். இருப்பினும், இது உங்களுக்கும் கடினமான முடிவாக இருந்திருக்கும், குறிப்பாக நீங்கள் இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை ஆடியவர் என்ற அடிப்படையில் உங்கள் முடிவை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.

புத்திசாலித்தனம், கடின உழைப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அணியை முன்னிலைபடுத்தி ஆடியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் விடைபெற்ற நிலையில்,​​ஜெர்சி எண் 99 உங்கள் இழப்பை உணரவைக்கும். நீங்கள் பந்துவீசுவதற்கு கிரீஸில் இருந்தபோது ஏற்படும் எதிர்பார்ப்பு உணர்வை இனி கிரிக்கெட் பிரியர்கள் இழக்க நேரிடும். நீங்கள் எதிரணியைச் சுற்றி ஒரு வலையைப் பின்னுகிறீர்கள் என்ற உணர்வு எப்போதும் இருந்தது. அது எதிரணியினரை எந்த நேரத்திலும் சிக்க வைக்கும். பழைய ஆஃப்-ஸ்பின் டெக்னிக் மற்றும் அதில் பல புதுமையான மாறுபாடுகள் மூலம் பேட்ஸ்மேன்களை மிஞ்சும் அசாத்திய திறமையை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள்.

அனைத்து வடிவங்களிலும் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான தொடர் ஆட்டக்காரர் விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனையை வைத்திருப்பது என்பது, கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றியில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டுகிறது.

ஒரு இளம் வீரராக, உங்கள் டெஸ்ட் அறிமுகத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தீர்கள். 2013 சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி ஓவரில் நீங்கள் அணியை வெற்றிபெறச் செய்த போது, நீங்கள் இந்திய அணியின் முக்கிய உறுப்பினராக மாறிவிட்டீர்கள். பின்னர், நீங்கள் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பல வெற்றிகள் மூலம் அணியில் மூத்த வீரராக முக்கிய பங்கு வகித்தீர்கள். ஐசிசியின் ஆண்டின் சிறந்த வீரர் விருது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் உலகளாவிய மரியாதையையும் பெற்றுள்ளீர்கள்.

ஒரே போட்டியில் பலமுறை சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உங்களின் ஆல் – ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். 2021 இல் சிட்னியில் பேட்டிங்கின் போது துணிச்சலான இன்னிங்ஸ் ஆடி போட்டியை காப்பாற்றி, பல நினைவுகளை நமது தேசத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள்.

தாங்கள் விளையாடிய சில அற்புதமான ஷாட்களுக்காக மக்கள் சில வீரர்களை அடிக்கடி நினைவுகூருவார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் புகழ்பெற்ற போட்டியில் (இந்தியா – பாகிஸ்தான் போட்டி) ஒரு ஷாட் மற்றும் பந்தை அடிக்காமல் விட்டதற்காக நீங்கள் நினைவுகூரப்படும் வீரராக இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அடித்த வெற்றிக்கான ஷாட் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் அதற்கு முந்தைய பந்தை அடிக்காமல் விட்டுச் சென்ற விதம், அதை வைட் பந்தாக மாற்றியது. அது உங்கள் விழிப்பான மனதை எங்களுக்கு காட்டியது.

இக்கட்டான தருணங்களில் கூட, உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு முதன்மையாக இருந்தது. உங்கள் தாயார் மருத்துவமனையில் இருந்தபோதும் அணிக்கு பங்களிக்க வேண்டி நீங்கள் போட்டிக்கு திரும்பி வந்த விதம் மற்றும் சென்னையில் வெள்ளத்தின் போது உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாதபோதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நீங்கள் விளையாடிய நேரத்தை நாங்கள் அனைவரும் நினைவில் கொள்கிறோம்.

​​உங்கள் நெகிழ்வுத்தன்மையும், தகவமைப்புத் தன்மையும் தனித்து நிற்கின்றன. விளையாட்டின் பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப உங்கள் அணுகுமுறையை நீங்கள் வடிவமைத்த விதம் அணிக்கு ஒரு சொத்தாக இருந்தது. ஒரு பொறியியலாளராக நீங்கள் பெற்ற கல்வி, நுட்பமான மற்றும் விவரம் சார்ந்த அணுகுமுறையில் உங்களுக்கு உதவியது எனக்கு வியப்பை அளிக்கிறது. உங்களின் உங்களது கூர்மையான கிரிக்கெட் மூளையை பல ஆய்வாளர்கள் மற்றும் சக வீரர்கள் பாராட்டி உள்ளனர். இதுபோன்ற அறிவு எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் உரையாடல்களில் நீங்கள் கொண்டு வரும் புத்திசாலித்தனம் மற்றும் அரவணைப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. கிரிக்கெட், விளையாட்டு மற்றும் பொதுவாக வாழ்க்கை பற்றிய ‘குட்டி ஸ்டோரீஸ்’-ஐ தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விளையாட்டின் தூதராக நீங்கள் நாட்டையும், உங்கள் குடும்பத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர், உங்கள் மனைவி பிரித்தி மற்றும் உங்கள் மகள்களையும் வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். அவர்களின் தியாகம் மற்றும் ஆதரவு, ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்ததாக நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை வருடங்களாக நீங்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என நினைக்கிறேன்.

இனி நீங்கள் மிகவும் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்களிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். மீண்டும் ஒருமுறை, உங்களது சிறந்த பங்களிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours