எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மூன்று படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர், அவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடனர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த சனிக்கிழமையன்று அன்று நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது. இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதேபோல இலங்கை கடற்படையின் தொடர் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
+ There are no comments
Add yours