உச்ச நீதிமன்றத்தில் உரிய தடையாணை பெறுவது மட்டுமே நிரந்தர தீர்வு – செல்வப்பெருந்தகை!

Spread the love

சென்னை: பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது விவசாயப் பெருமக்கள் அனைவரும் ஆந்திர அரசின் இந்த எதேச்சதிகார முடிவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், m“கர்நாடகா மாநிலத்தின், நந்திமலையில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது பாலாறு. இந்த நதி, கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும், ஆந்திராவில் 33 கிலோமீட்டரும் பாய்ந்தோடி வருகிறது. தமிழ்நாட்டில் தான் அதிக தொலைவான 222 கிலோமீட்டருக்கு பாலாறு பயணிக்கிறது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்று நீரினால் பயன்பெறும் மாவட்டங்கள். இதன்மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.

ஆந்திர அரசு ஏற்கனவே சிறிதும், பெரிதுமாக இதுவரை 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது. மேலும் தற்போது 23 வது தடுப்பணை கட்டுவதற்கு ரூ 215 கோடி ஒதுக்கி அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதற்கான அடிக்கல் நாட்டியுள்ள செய்தி பேரதிர்ச்சியை தருகிறது. இது தமிழக விவசாயிகளையும், மக்களையும் வஞ்சிக்கின்ற செயலாகும். ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892 ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையே ஏற்பட்ட நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரான செயலாகும்.

பாலாற்றுப் படுகை முழுவதும் யானைக்கூட்டங்கள் பயணிக்கின்ற வழித்தடமாகும். அந்த இடங்களில் தடுப்பணைகளை கட்டக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடையாணை வழங்கியுள்ளதை ஆந்திர அரசு நினைவில் கொள்ளவேண்டும். பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது விவசாயப்பெருமக்கள் அனைவரும் ஆந்திர அரசின் இந்த எதேச்சதிகார முடிவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்து.

ஆந்திர வனத்துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பாக யானைகள் புழங்கும் வழித்தடங்கள் எதுவும் தடுப்பணை கட்டும் பகுதிகளில் இல்லை என்றும், இதற்கு எதிரான எந்த வழக்கும் நீதிமன்றத்தில் இல்லை என்றும் உண்மைக்கு புறம்பான பொய்கதைகளை தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். ஒரு வழக்கு நிலுவையில் உள்ளபோது அதை மீறும் விதமாக தவறான

தகவல்களை அளித்து, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது ஜனநாயக நீதி பரிபாலனத்திற்கு எதிரான ஒன்றாகும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இரு மாநிலங்களை சார்ந்த அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. ஆனால், ஆந்திர அரசோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்பொழுது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியிருப்பது இரு மாநில உறவுக்கும் நன்மை பயக்காத செயல்.

அனைத்து நதிகளுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கையில் உள்ளதால் பிரதமர் மோடி உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். தொடர்ந்து தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசும் உடனடியாக இப்பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, ஆந்திர முதல்வரிடம் உடனடியாக பேசி தமிழக வடமாவட்ட விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours