காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு நீள்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்குதல் தொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிநாட்டு சக்திகளால் தீர்மானிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு கிடைப்பதாக குற்றம் சாட்டினார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை அடுத்து செய்தியாளர்களிடம் அனுராக் தாக்கூர் பேசினார். ”பாஜக பேரிடர் மற்றும் அவசர காலங்களின் அரசியலில் நம்பிக்கை வைப்பதில்லை. எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி மிகவும் தாழ்ந்துவிட்டது. அது போன்ற இடர்காலத்திலும் அரசியல் செய்கிறது. ஆனால் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் கன மழையின் போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெரும் பங்காற்றியது” என்றார்.
அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்த அனுராக் தாக்கூர், “நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் தோல்வி பயத்தில் ராகுல் காந்தி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஓடுகிறார். முதலில், அவர் அமேதியில் இருந்து வயநாடுக்கு போட்டியிட்டார். இப்போது அவர் ரேபரேலியில் போட்டியிடுகிறார். மேலும் ரேபரேலியிலும் காங்கிரஸ் அழிந்து போவது உறுதி.
“பொய்யான வாக்குறுதிகளை அடுக்கி தேர்தலில் வெற்றி பெற முயலும் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழும் காங்கிரஸ் கட்சிக்கு, பாகிஸ்தானில் இருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. அதன் வாக்குறுதிகளிலும், பாகிஸ்தானின் தாக்கம் அதிகம் உள்ளது. ஆனால், வாக்குப்பதிவு முடிவு அறிவிக்கப்பட்ட ஜூன் 4-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் கனவுகள் தகர்க்கப்படும்” என்று அவர் தாக்கினார்.
அனுராக் தாக்கூர் 2024 மக்களவைத் தேர்தலில் ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ’இம்முறையும் வெற்றி பெறுவேன் என்பதற்கு அப்பால், கடந்த முறை வெற்றி கொண்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தை விட, தற்போது கூடுதல் வித்தியாசத்தில் தனது வெற்றி இருக்கும்’ என்றும் அவர் உறுதி கூறினார்.
+ There are no comments
Add yours