இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற உள்ளன.
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா, வரும் 26ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
குடியரசு தின விழா அன்று டெல்லி கர்தவியா பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும். அதன்படி, இந்த ஆண்டு அணிவகுப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ – விண்கல மாதிரி ஊர்தி இடம்பெற உள்ளது.
‘சந்திரயான்-3’ சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, ‘சிவ சக்தி பாயிண்ட்’ என பெயரிடப்பட்ட தரையிறங்கிய இடம் ஆகிய தகவல்களை பிரதிபலிக்கும் வகையில் இஸ்ரோ ஊர்தி இடம்பெற உள்ளது.
சந்திரயான்-3 லேண்டர் விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நிலவின் தென் துருவத்தில் முதன் முதலாக விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தது.
குடியரசு அணிவகுப்புக்கான உத்தரப் பிரதேச அலங்கார ஊர்தியில் ராமர் இடம்பெறுகிறார். அயோத்தி ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரான பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அம்மாநில அரசு சார்பிலான அலங்கார ஊர்தியில் பால ராமர் சிறப்புகளை சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற உள்ளன. அடுத்த தலைமுறை பிரமோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆலை உருவாக்கப்பட்டு வருவதால், அம்மாநில அரசு ஊர்தியில் பிரமோஸ் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 16 அலங்கார ஊர்திகள், மத்திய அரசின் 9 துறைகளைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் உள்பட மொத்தம் 25 அலங்கார ஊர்திகள், குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.
+ There are no comments
Add yours