நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறல் நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் திடீரென 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் அங்கு வண்ண புகை குண்டுகளை வீசினர். நாடாளுமன்ற வளாகத்திலும் 2 பேர் வண்ணபுகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிக பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்றத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறது. மேலும், அத்துமீறிய நபர்களுக்கு பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற பணியாளர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது ஏன் நடந்தது? நாட்டின் முக்கிய பிரச்சினை வேலையின்மை. பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போனது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வே பட்டதாரி இளைஞர்களின் கோபத்துக்கு காரணம்” என குற்றம் சாட்டினார்
+ There are no comments
Add yours