பூமியை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ – நாசாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைகோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ – நாசாவுடன் இணைந்து பூமியின் கடல்மட்ட உயரம், எரிமலை வெடிப்பு, பனிக்கட்டி உருகுதல் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆராய நிசார் என்ற செயற்கைகோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைகோள் 90 நாட்கள் பூமியை வானில் இருந்தபடி ஆய்வு செய்யும். இது பூமியை 12 நாட்களுக்கு ஒரு முறை முழுமையாக சுற்றி வந்து தகவல்களை அளிக்கும். இதன் மூலம் பூமியில் இதுவரை கண்டறியப்படாத ரகசியங்களை ஆராய்ந்து தகவல்களை தரும். அதன் அடிப்படையில் பூமியின் இயற்கை வளங்களை மனிதர்கள் எப்படி திறம்பட பயன்படுத்துவது, பேரிடர்களை எப்படி எதிர்கொள்ளவது என்பது குறித்த புரிதல்களை ஏற்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உலக வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பூமியின் மேற்பரப்பை முழுமையாக புரிந்துகொள்ளவும் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் உயரத்தில் 98.4 டிகிரி கோணத்தில் நிசார் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார் எனப்படும் ‘நிசார்’ இந்திய-அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவானது. நிசார் செயற்கைகோளுக்கான முழு சோதனைகளும் பெங்களூருவில் நடைபெற்று வருவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours