காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2வது தொகுதியாக அமேதிக்கு பதிலாக ரேபரேலியில் போட்டியிடுவதை குறிப்பிட்டு, பயந்து ஓட வேண்டாம் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், பர்தமான் – துர்காபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தத் தேர்தலின் முடிவு தெளிவானது. கருத்துக் கணிப்புகள் எதுவும் தேவையில்லை. இளவரசர் (ராகுல் காந்தி) வயநாட்டிலும் தோல்வியடைவார். எனவே இரண்டாவது தொகுதியை தேடுவார் என்பதை நான் முன்பு கூறியிருந்தேன். இப்போது அவர் அமேதியில் போட்டியிட பயந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார்.
‘பயப்படாதே, ஓடாதே’ என நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். அரசியல் சாசனத்தை மாற்றவும், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை பறித்து ‘ஜிகாதி’ வாக்கு வங்கி பிரிவினருக்கு வழங்கவும் காங்கிரஸ் விரும்புகிறது. எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியைக் கொண்டு வர முடியாது. வாக்குகளுக்காக சமூகத்தை பிளவுபடுத்த மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.
வங்கத்தில் இந்துக்களுக்கு என்ன நடக்கிறது? திரிணமூல் காங்கிரஸ் அரசு, மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாவது குடிமக்களாக ஆக்கியுள்ளது போல் தெரிகிறது. இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. இடதுசாரிகள் திரிபுராவை முற்றிலுமாக அழித்தனர்.
அவர்கள் 35 ஆண்டுகள் அங்கு ஆட்சி செய்தனர். கடந்த 5 ஆண்டுகளில் திரிபுராவை பாஜக முற்றிலுமாக மாற்றியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடம் நான் கேட்க விரும்புகிறேன்… சந்தேஷ்காலியில் எங்கள் தலித் சகோதரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. அதில் நடவடிக்கை எடுக்க முழு நாடும் கோரிக்கை விடுத்து கொண்டிருந்தது. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் குற்றவாளியை பாதுகாத்ததை தான் காண முடிந்தது” என்றார்.
+ There are no comments
Add yours