புத்தாண்டு தினமான இன்று இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், புத்தாண்டு தொடங்கியது, எக்ஸ்போசாட் வெற்றிகரமாக விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது எனக் கூறினார்.
ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கிய நிலையில் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு படிநிலையாக ராக்கெட்டை விண்ணில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிறைவேற்றப்பட்டது.
விண்வெளியில் பரவும் எக்ஸ்கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான்நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை இது ஆராயும்.
ஒரே நேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இந்த தரவுகள்,பிரபஞ்சத்தின் செயல்பாடு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours