அதிமுகவை மீட்பதற்காக காலம் ஓ.பன்னீர்செல்வத்தையும், தன்னையும் கைகோக்க வைத்துள்ளதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவரை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”என்னை பச்சோந்தி என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் உண்மையான பச்சோந்தி யார் என்பது மக்களுக்கு தெரியும். அதிமுகவை மீட்டெடுப்பதற்காக காலம் என்னையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் மீண்டும் கை கோர்க்க வைத்துள்ளது. இந்த தேர்தல் மத்தியில் பிரதமராக யார் அமர வேண்டும் என்பதற்கான தேர்தல். மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார். இதுபோல் திமுகவில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா? ” என்றார்.
மேலும், ”திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு, இபிஎஸ் மக்களை ஏமாற்றி வருகிறார். எங்கே நானும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜக உடன் இணைந்து விட்டால், அதிமுக தொண்டர்கள் எங்களை ஆதரித்து விடுவார்களோ என அவர்களுக்கு பயம். அதன் காரணமாகவே எங்கள் இருவர் குறித்தும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் தந்தை, எம்ஜிஆரை எதிர்த்து திமுகவில் போட்டியிட்டவர். அந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
கூட்டத்தில் இருந்த சிலர், அதிமுக வேட்பாளரை கஞ்சா வியாபாரி என விமர்சித்தனர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “அப்போ அவரு திமுகவில் தானே இருக்கனும்” என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
+ There are no comments
Add yours