மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக-தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடரும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளும் பாஜக அரசு வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா கூட்டணியில் இன்னும் சில அரசியல் கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுவதால், விரைவில் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது கூட்டணிகளை இதுவரை இறுதி செய்யவில்லை. குறிப்பாக தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் வருகை தந்தனர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அவர்கள் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிரேமலதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “மரியாதை நிமித்தமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்துள்ளோம். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைத்து முடிவு செய்வோம்” என்றார்.
+ There are no comments
Add yours