மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து இன்று இரவு அக்கட்சிப் பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி ஆதரித்து பிரச்சாரம் செய்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, அமைப்பு செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், விவி.ராஜன் செல்லப்பா, எம்எல்ஏ-க்கள் பெரியபுள்ளான், கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்தியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேட்பாளர் சரவணன் பேசுகையில், ‘‘உலகின் 7-வது பெரிய கட்சியின், இந்தியாவின் 3-வது பெரிய கட்சி, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி அதிமுக. கடந்த 3 ஆண்டு ஆட்சியால் மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிள்ளிக்கூட தரவில்லை. அலங்காநல்லூர் ஊருக்கு வெளிபுறமாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டி, நமது பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்க முயற்சி செய்துகிறது.
மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், கடந்த ஐந்து ஆண்டு காலம் சும்மாவே இருந்ததால் அவரை மக்கள் தற்போது கிண்டலாக சு.வெ என்று அழைக்கத் தொடங்கியுள்ளார்கள். அவர் சமூக வலைதளங்களில் மட்டுமே ஆ்ன்லைனில் இருப்பார். மக்களை நேரில் சந்திப்பதில்லை.
முன்பு கதை எழுதிக் கொண்டிருந்தவர் தற்போது தேர்தலில் கதை விட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் மதுரைக்கு நிறைவேற்றியதாக கூறும் திட்டங்களை பைனாகூலர் மூலம் பார்க்கிறேன். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர் மதுரைக்கு எதுவும் செய்யவி்லலை. மற்றொருவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஒற்றை செங்கலை தேர்தலுக்கு தூக்கி கொண்டு மதுரைக்கு வருகிறார்.
அவர் ‘சிலபஸை’ மாற்றவே இல்லை. இப்படி பொய்களை கூறி நம்மை ஏமாற்றப்பார்கிறார்கள். திமுகவினர் எதிர்ப்பையும் மீறி திரும்பவும் சு.வெ ‘சீட்’ வாங்கி வந்துள்ளார். ஒரு விளம்பர பிரியர். ஆனால், என்னை அடடே நம்ம சரவணன், நம்ம டாக்டர் என அழைக்கலாம். மக்களுடன் மக்களாக இருக்கும் எனக்கு வாக்களிக்கலாம்’’ என்றார்.
+ There are no comments
Add yours