இது ஜனநாயக படுகொலையாகவே நான் கருதுகிறேன்… உதயநிதி ஸ்டாலின் !

Spread the love

ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரொக்கமாக 6,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னையில் அனைத்து வட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிவாரணம் பெற முடியும் என்ற சூழல் உருவானது.

சென்னையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து குடும்பத்தினருடன் தங்கி பணிபுரிபவர்கள். அவர்களும் மழை வெள்ளத்தில் காரணமாக உடைமைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுவாக எதிரொலித்துள்ளன. ஆனாலும் அரசுத் தரப்பில் இருந்து ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக எந்த பதிலும் தரப்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெளிவாக உள்ளது. சென்னையில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்கள் இருக்கிறார்கள், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனரே என்ற கேள்விக்கு, “முதல் கட்டமாக ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு நிவாரணம் கொடுத்து முடிப்போம். பிறகு அதுகுறித்து பரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, சென்னை வடிகால் பணிகளுக்காக குழு அமைத்து 4000 கோடி ரூபாய் ஒதுக்கியதால்தான் சென்னை இவ்வளவு சீக்கிரமாக இயல்பு நிலைக்கு மீண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “நாடாளுமன்ற வண்ண புகை குண்டு வீச்சு விவகாரத்தில் நுழைவுச் சீட்டு வழங்கிய எம்.பி மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கச் சொன்ன 15 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலையாகவே நான் கருதுகிறேன். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு எப்போதாவதுதான் வருகிறார். அதனால்தான் பாதுகாப்பை கோட்டை விட்டுவிட்டார்கள் எனக் கருதுகிறேன்” என்றும் தெரிவித்தார்.

ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அரசு பரிசீலித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours