இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு, மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜக மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்க மீண்டும் மோடியை பிரதமர் வேட்பாளராக கொண்டு களமிறங்க காத்திருக்கிறது. இதனிடையே பாஜகவுக்கு எதிராக உருவான இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 கட்சிகளின் பங்கேற்பில் இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு இன்று டெல்லியில் நிறைவடைந்தது. இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக, இந்தியா கூட்டணியின் பிரதமர் முகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றில் இறுதி முடிவாக கார்கேவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
முன்னதாக இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்களான பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பிரதமர் வேட்பாளராக அவர்தம் கட்சி சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் பரிந்துரைக்கப்பட்டனர். அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரை அவர்களின் கட்சியினர் இவ்வாறு முன்னிறுத்தினர்.
இவர்களுக்கு அப்பால் இந்தியா கூட்டணிக்கு வித்திட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் அமைதியாக காய் நகர்த்தினர்.
இந்தியா கூட்டணியின் பெரும் கட்சியும், பாஜகவுக்கு மாற்றானதுமான காங்கிரஸ் கட்சிக்கு வெளியே பிரதமர் வேட்பாளர் பரிந்துரைக்கப்படுவதில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. ஓரிரு மா நிலங்களுக்கு அப்பால் தேசம் தழுவிய தலைவராக மக்களின் அபிமானத்தை அவர்களால் வசீகரிக்க முடியாததே இதற்கு காரணமானது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்குவதற்கு, மம்தா, கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே பிரதமர் வேட்பாளரை தெரிவு செய்யும் வகையில், அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெயருக்கு ஒருமித்த ஆதரவு கூட்டணியில் வெளிப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours