இபிஎஸ்-க்கு எதிராக திமுக மானநஷ்ட ஈடு வழக்கு!

Spread the love

போதைப் பொருள் பறிமுதல் மற்றும் கைது விவகாரங்களில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச தடை விதிக்கவும், அவர் திமுகவிற்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்ககோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் சிக்கினார். இதையடுத்து அவர் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை கண்டித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போதைப் பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவிற்கும் தொடர்பு உள்ளது. இதனால், முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல் மற்றும் கைது விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இது கட்சிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது விவகாரங்களில் திமுகவை தொடர்புபடுத்தி பேச அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் திமுகவுக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும், என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அடுத்தடுத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், போதைப் பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours