மத்திய பிரதேச மாநிலத்தில் சியோனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2014க்கு முன் காங்கிரஸின் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடியாக இருந்தது, இப்போது பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆனது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சியோனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்படும் என்று கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன்
அவர் கூறியதாவது, “நான் வறுமையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடிகிறது. எனவே, ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ டிசம்பரில் முடிவடைந்ததும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்குவோம் என்று உங்கள் மகன், உங்கள் சகோதரர் மனதில் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார்.” என்று கூறினார்.
பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் “காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது. காங்கிரஸ் வளர்ச்சியை நோக்கி உழைக்கவில்லை. ஏழை மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் நோக்கில் உள்ளது. 2014க்கு முன் காங்கிரஸின் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடியாக இருந்தது, இப்போது பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. ஏழைகளின் உரிமைகளுக்காக நாம் சேமித்த பணம் தற்போது ஏழைகளின் ரேஷனுக்காக செலவிடப்படுகிறது. ஊழல்வாதி காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்.” என்று கூறினார்.
தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி
மேலும், “நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறப் போகிறது என்பது மக்களின் உத்தரவாதம். நமது மத்தியப் பிரதேசத்தில் நல்லாட்சி மற்றும் வளர்ச்சியில் தொடர்ச்சி தேவை. ஒட்டுமொத்த மாநிலமும் பாஜக இருந்தால் நம்பிக்கை உண்டு, பாஜக இருந்தால் வளர்ச்சி உண்டு, பாஜக இருந்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறுகிறது.” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours