தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய அமைச்சர் உதயநதி ஸ்டாலின், ஆனால் உண்மையான கடவுள் யார் என்று தனக்கு தெரியும் எனத் தெரிவித்தார். மேலும், இதை சொன்னால் அமைச்சர் சேகர் பாபு கோபித்துக் கொள்வார் எனவும் அவர் கூறினார்.
கடவுள், ஆன்மீகம், மதம் ஆகியவை பற்றி பேசி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கடந்த மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்வதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இந்து மதத்தின் சாராம்சமான சனாதனக் கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இதனிடையே, மீன்வளத்துறை சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
வெள்ள நேரத்தில் முதலமைச்சராக இருக்கட்டும். இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்களாக இருக்கட்டும். திமுக எம்எல்ஏக்களாக இருக்கட்டும். எல்லோரும் போய் மக்களை சந்தித்தோம். யாரும் வீட்டை பூட்டிட்டு உள்ளே ஒளிஞ்சுக்கல. எல்லோரும் களத்துல நின்னு மக்களோடு மக்களாக நின்னோம்.
எந்த தைரியத்துல நின்னோம். நீங்க (மீனவர்கள்) எங்களுக்கு துணையா இருப்பீங்க.. மீட்புப் பணியில் நீங்க எனக்கு துணை நிப்பீங்க என்ற தைரியத்தில் தான் நாங்க மக்கள் கூட போய் நின்னோம். பொதுவாகவே, யாராக இருந்தாலும் கேட்டால் தான் உதவி செய்ய வருவார்கள். ஆனால், மீனவ நண்பர்களாகிய நீங்கள் யாரும் கேட்காமலேயே உங்க படகுகளை எடுத்துட்டு மக்களை மீட்க வந்தீங்க.
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. இதை சொன்னா சேகர்பாபு அண்ணே கோச்சிக்குவாரு . ஆனால், யார் உண்மையான கடவுள்னு எனக்கு தெரியும். யார் ஒருவன் அடுத்தவரின் உயிரை காப்பாற்றுகிறானோ அவன்தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால், நீங்க (மீனவர்கள்) ஒவ்வொருத்தருமே கடவுளுக்கு சமம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
+ There are no comments
Add yours