ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை அங்கீகரித்த சபாநாயகரின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இக்கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதனிடையே கட்சியில் அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 16 எம்.எல்.ஏ.,க்கள் கட்சியில் இருந்து விலகி தாங்கள்தான் சிவசேனா என அறிவித்தனர். இவர்களுக்கு பாஜக ஆதரவளித்ததை தொடர்ந்து உத்தவ் தாக்கரே பதவி விலகி ஏக்நாத், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற 16 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் சட்டப்பேரவை தலைவரிடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. கடந்த 10ஆம் தேதி இந்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் ராகுல் நார்வேக்கர் ஷிண்டே தலைமையிலான அணியே சிவசேனா கட்சி எனவும் அறிவித்திருந்தார். சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து, சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் ஏற்க மறுத்ததற்கு எதிராகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours