ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில் தான் நடக்கிறது – ராகுல் காந்தி !

Spread the love

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில் தான் நடந்து வருவதாக, அம்மாநில பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் 5-வது நாளான இன்று நாகாலாந்தின் துலியில் இருந்து அசாமின் ஜோர்ஹாட் வரை நடைபயணம் மீண்டும் தொடங்கியது. அசாமில் உள்ள சிவசாகரில் யாத்திரை நுழைந்ததும் தேசிய கொடி ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, “பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அநீதி செய்து வருகின்றன. அது பொருளாதார அநீதி, சமூக அநீதி, அரசியல் அநீதியாக உள்ளது. மணிப்பூரில் உள்நாட்டுப் போர் சூழல் நிலவுகிறது. இன்று வரை பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை. நாகாலாந்தில் பிரதமர் பெரிய வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் என்ன ஆனது என்று நாகாலாந்து மக்கள் இன்று கேட்கிறார்கள்.

இதே போன்ற சம்பவங்கள் அசாமிலும் நடக்கின்றன. இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி அசாமில் தான் நடக்கிறது. நாகாலாந்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அசாமிலும் அதேபோல் வரவேற்பை பெறுவோம் என நம்புகிறேன். ராகுல் காந்தி எப்போது வருவார் என மக்கள் காத்திருக்கிறார்கள்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம். எங்கள் கட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறது. இன்று பாஜகவினர் தங்களை, சங்கராச்சாரியார்களை விட அதிக அறிவுடையவர் களாக கருதுகின்றனர். அந்தளவுக்கு அவர்களிடம் நிறைய ஈகோ உள்ளது” என்றார்.

அசாமில் முதல்வர் ஹிமந்த விஸ்வ ஷர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரின் தௌபாலில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க உள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours