நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் தோன்றி மக்கள் நலத்திட்ட உதவிகளையும், அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில்,
விஜய் மக்கள் இயக்கத்தின் ஊடாக நடிகர் விஜய் செய்யும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அரசியல் கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் சென்னை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதாகவும், இந்த கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என பெயர் சூட்டி உள்ளார்.
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோவை, கரூர், மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விஜய் நற்பணி மன்ற கொடியுடன் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், பூக்கடை மற்றும் தரைக்கடை வியாபாரிகளுக்கு சீருடை மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
+ There are no comments
Add yours